திருத்தணி அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.
ரேஷன் அரிசி கடத்தல்
திருவள்ளூர், திருத்தணி அருகே சென்னை டு திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தரணிவராகபுரம் பகுதியில் நேற்று திருவள்ளூர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் 3 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திராவில் அதிக விலைக்கு விற்று வந்தது விசாரணையில் அம்பலமானது. இது தொடர்பாக ரஞ்சித் (25), டிரைவர் முபராக் (33) ஆகிய இரு நபர்களையும் கைது செய்த போலீசார், சரக்கு வாகனம் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

