கள்ளக்குறிச்சி பள்ளி மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நீதிமன்ற வழக்கு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 13ம் தேதி 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரில் பெற்றோர் உடலை வாங்க மறுத்தனர். மேலும், மாணவியின் பெற்றோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால் மறுபிரேத பரிசோதனையை தாங்கள் கூறும் மருத்துவரை வைத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
உடல் அடக்கம்
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் வழக்கை திரும்பப் பெறக் கூறி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்நிலையில், மாணவியின் உடலை வாங்க பெற்றோர் சம்மதித்துள்ளனர். இதனால் மாணவியின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

