ஒவ்வொரு நாளும் பூமியில் லட்சக்கணக்கான டன் அளவுள்ள குப்பைகள் கொட்டப்படுகின்றன. அவை மக்கும் குப்பைகளாக இருக்கின்றன, மக்காத குப்பைகளாகவும் இருக்கின்றன.
மக்காத குப்பைகளில் மிகவும் முக்கியமானவை பிளாஸ்டிக் மற்றும் தூக்கி வீசப்படும் உபயோகமற்ற மின்னணு சாதனங்கள் தான்.
தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் உபயோகமற்ற மின்னணு சாதனங்களில் இருந்து மூலப்பொருள்களை பிரித்தெடுக்கும் மறுசுழற்சி வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அப்படி எலக்ட்ரானிக் பொருள்களை மறுசுழற்சி செய்திடும் போது அதற்காக அபாயகரமான அமிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அப்படி பயன்படுத்தப்பட்ட தண்ணீர், அமிலங்கள் வேதியியல் மாற்றங்களுக்கு பிறகு வெளியாகும் போது மிகவும் ஆபத்தானவையாகவும் சுற்றுசூழலுக்கு நெடுங்காலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாகவும் இருக்கின்றன.
இதற்கு மாற்று தீர்வை நோக்கி பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் முயன்றுகொண்டு இருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகத்தான் பழைய பேட்டரிகளில் இருந்து மூலப்பொருள்களை பிரித்து எடுக்க உரித்த ஆரஞ்சு தோல்களை பயன்படுத்தலாம் என கண்டறிந்து இருக்கிறார்கள் சிங்கப்பூர் விஞ்ஞானிகள்.
குறைந்த செலவில் பாதிப்பில்லாத மறுசுழற்சி
சிங்கப்பூரில் இருக்கும் நான்யாங் தொழில்நுட்ப கல்லூரியை [Nanyang Technological University, Singapore ] சேர்ந்த விஞ்ஞானிகள் ஆரஞ்சு பல தோலில் உதவியுடன் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளில் இருந்து மூலப்பொருள்களை பிரித்து எடுத்து புதிய பேட்டரிகளை உருவாக்க முடியும் என்பதை செய்து காட்டியுள்ளனர்.
“ஒவ்வொரு ஆண்டும் 1.3 லட்சம் டன் உணவுக்கழிவும் 50 மில்லியன் டன் எலெட்ரானிக் கழிவும் கொட்டப்படுகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில் இந்த மாதிரியான கண்டுபிடிப்பு இரண்டு முக்கியப்பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்து இருக்கின்றனர்.
மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடிய மாசுபடுத்திகளை உருவாக்க வல்லவை பழைய பேட்டரிகள். அவற்றை மறுசுழற்சி செய்திட தற்போது தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் அணுகுமுறைகள் மூலமாக இரண்டாம் கட்ட மாசுபடுத்திகள் உருவாகின்றன.
பொதுவாக கையாளப்படும் இந்த முறையில் பேட்டரிகள் முழுமையாக நசுக்கப்பட்டு, துண்டு துண்டாக ஆக்கப்பட்டு கறுப்பு நிறை [black mass] உருவாக்கப்படும். பின்னர் அதிலிருந்து ஒவ்வொரு உலோகத்தையும் பிரித்து எடுப்பதற்காக சக்தி வாய்ந்த அமிலங்கள்/சக்தி குறைவான அமிலங்கள் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடுபோன்ற வேதிப்பொருள்கள் அதோட சேர்க்கப்படும்.
வழக்கமான நடைமுறைகளைக்காட்டிலும் ஓரளவு இந்த நடைமுறைகள் பாதுகாப்பானவை என்றாலும் கூட இந்த முறையிலும் கணிசமான அளவில் இரண்டாம் கட்ட மாசுபடுத்திகள் உருவாகி சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கின்றன.
ஆரஞ்சு பழ தோல்
வீசப்படும் ஆரஞ்சு பழ தோல்களில் இருக்கும் சிட்ரிக் அமிலம் மூலமாக மேற்கூறிய முறையில் இருந்து பெறப்படும் அதே உலோகங்களை பிரித்து எடுக்க முடியும்.
ஆரஞ்சு தோலில் காணப்படும் செல்லுலோஸ் பிரித்தெடுக்கும் செயல்பாட்டின் போது வெப்பத்தின் கீழ் சர்க்கரைகளாக மாற்றப்படுகிறது. இந்த சர்க்கரைகள் பேட்டரி கழிவுகளிலிருந்து உலோகங்களை மீட்டெடுப்பதை மேம்படுத்துகின்றன.
ஆரஞ்சு தோலில் காணப்படும் இயற்கையாக நிகழும் ஆக்ஸிஜனேற்றிகளான ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினோலிக் அமிலங்கள் இந்த விரிவாக்கத்திற்கும் பங்களித்திருக்கலாம்.
முக்கியமாக, இந்த செயல்முறையிலிருந்து உருவாக்கப்படும் கழிவுப்பொருள்கள் நச்சுத்தன்மையற்றவை எனக் கண்டறியப்பட்டது, இந்த முறை சுற்றுச்சூழல் ரீதியானது என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.