பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
மாதவிடாய்
மாதவிடாய் என்பது பூப்பெய்திய ஒவ்வொரு பெண்ணிற்கும் நிகழும் உடலியங்கியல் மாற்றமாகும். இந்த உடலியங்கியல் மற்றும் மாதந்தோறும் சுழற்சி முறையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு மாதமும் ஒரு பெண் கருத்தரிப்பிற்கான தயார்படுத்துதலுக்காக போதிய ரத்தம் உள் மடிப்புகளில் நிரம்பியிருக்கும். கருப்பையில் கரு கட்டிய முட்டைக்கு ஊட்டச்சத்து அளிக்கவே இந்த மடிப்பில் ரத்தம் தங்கியிருக்கும்.
அவ்வாறு பெண் கருத்தரிக்காத நேரங்களில் தேவையற்ற கழிவுகளோடு தங்கியிருந்த தேவையற்ற ரத்தமும் வெளியேறும். இந்த நிகழ்வு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 3 முதல் 7 நாட்களுக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்வின் முதல் அல்லது இரண்டாவது நாட்களில் பல்வேறு வலிகளுடன் கூடிய ரத்தப்போக்கு வெளியேற்றம் நிகழும்.
அசவுகரிய உணர்வு
மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் கடுமையான வயிற்றுவலி, தலைவலி, கால்வலி, வயிற்றுப்போக்கு, குமட்டல் போன்ற அசவுகரியமான உணர்வுகள் இருக்கும். அனைத்து பெண்களும் மாதவிடாய் காலங்களில் இத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு அன்றாட கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
டிஸ்மெனோரியா
ஸ்பெயினின் மகப்பேறியல் சங்கம், மாதவிடாய் சந்திக்கும் மூன்றில் ஒரு பகுதி பெண்கள் டிஸ்மெனோரியாவை (மிகுந்த மாதவிடாய் ) சந்தித்து வருகின்றனர் என்று கூறுகிறது. இந்த டிஸ்மெனோரியாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் கடுமையான தலைவலி, கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், தீவிர தசை பிடிப்பு மற்றும் கடுமையான வயிற்றுவலி போன்றவற்றை அனுபவிக்கிறார்கள்.
ஒவ்வொரு மாதமும்
மாதவிடாய் காலங்களில் பெண்கள் இவ்வாறு அவதிப்படுவதை கருத்தில் கொண்டு, முற்போக்கு சீர்திருத்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் 3 நாட்கள் விடுமுறை வழங்க ஸ்பெயின் அரசு முடிவு செய்துள்ளது.
முழு அறிவிப்பு
ஸ்பெயின் அரசாங்கம் வரும் செவ்வாயன்று அதன் அமைச்சரவை கூட்டத்தின் போது மாதவிடாய் விடுமுறை குறித்த முடிவுக்கு ஒப்புதல் அளித்து. இதுகுறித்த முழுமையான அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளை தொடர்ந்து மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் மேற்கத்திய நாடாக ஸ்பெயின் விளங்க போகிறது.
ஸ்பெயின் அரசின் மகத்தான மாதவிடாய் விடுமுறை அங்குள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று திகழ்கிறது.