நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் அளவிற்கு எனக்கு தகுதி இல்லை என மாணவன் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
நீட் மாணவன் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த கோபி என்பவரது மகன் முரளி கிருஷ்ணா(19). இவர் கடந்த ஆண்டு 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை அவர் எழுதியுள்ளார். இருப்பினும் அந்த தேர்வில் போதுமான மதிப்பெண்களை பெற முடியாத நிலையில், வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்விற்காக மாணவர் முரளி கிருஷ்ணா தயாராகி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை முரளி கிருஷ்ணா, தனது அறைக்கு சென்று கதவை பூட்டி கொண்டு உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் மகன் வெளியே வராததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் அறையின் கதவை திறந்து பார்த்தபோது, அவர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக முரளி கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் மாணவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், தனக்கு நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், மருத்துவ படிப்பில் சேரும் அளவிற்கு தன்னால் மதிப்பெண் பெற முடியாது என்றும் முரளி கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார். தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது ஓசூர் மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

