உலகம்

பிரிட்டனில் புதிய வகை வைரஸ்; கொரோனா வைரஸ், தக்காளி வைரஸ் வரிசையில் குரங்கு வைரஸ்!

பிரிட்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு புதிய வகை வைரஸான குரங்கு அம்மை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சீனியர் வைரஸ்கள்

கடந்த 2 வருடங்களாக உலகம் கொரோனா வைரஸ் பயத்தின் போர்வைக்குள் அடங்கி இருந்தது. கட்டாய முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றின் மூலம் தற்போது கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த வாரம் கேரளாவில் தக்காளி வைரஸ் பரவி வந்த நிலையில் தற்போது பிரிட்டனில் குரங்கு அம்மை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

குரங்கு அம்மை வைரஸ்

கடந்த மே 7 ஆம் தேதி நைஜீரியா சென்று லண்டன் திரும்பிய ஒரு நபருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நபரின் விமான பயணத்தின்போது, இவருடன் பயணித்த சக பயணிகளுக்கும் இந்த தொற்று பரவாமல் இருக்க உரிய சுகாதார ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

தொற்று உறுதி செய்யப்பட்ட இந்த நபருடன் தொடர்பில்லாத, லண்டன் நகரில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு குரங்கு அம்மை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், எவ்வாறு இந்த தொற்று பரவுகிறது என சுகாதாரத்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.

மருத்துவர்களின் கணிப்பு

பிளவு ஏற்பட்ட தோல், கண், மூக்கு, வாய் , சுவாசப்பாதை போன்றவற்றின் மூலம் பரவும் இந்த அம்மை நோய் மேற்கு மற்றும் மத்திய ஆப்ரிக்காவில் தொற்றினால் பாதிக்கப்பட்ட விலங்குகளை உண்பதன் மூலம் மனிதர்களுக்கு  பரவி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு நடவடிக்கை

குரங்கு அம்மை வைரஸ் தொற்று எளிதில் மற்றவர்க்கு பரவாது எனினும், தொற்றினால் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தனித்திருப்பது நல்லது. குரங்கு அம்மை வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபரிடம் நெருக்கமாக இருந்தவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, தசைவலி, முதுகுவலி, குளிர், சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே தாமதிக்காமல் மருத்துவரை அணுகவேண்டும் என பிரிட்டன் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related posts