உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தால் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ்
2008ம் ஆண்டு வெளியான குருவி திரைப்படம் மூலம் தயாரிப்பளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வந்தார். அதன்பிறகு சிறிதுகாலம் தயாரிப்பு பணியில் ஈடுபடாமல் இருந்தார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரானார். அதனைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிவிட்டார் உதயநிதி ஸ்டாலின்.
திரைப்படங்கள்
தற்போது பல திரைப்படங்களின் தமிழக விநியோக உரிமையை வாங்கி வருகிறார். அதன்பெயரில் சூர்யா நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான எதற்கும் துணிந்தவன், பீஸ்ட், காதுவக்குல ரெண்டு காதல், டான், விக்ரம் மற்றும் அடுத்த மாதம் வெளியாகயிருக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை இந்த நடப்பாண்டில் விநியோக உரிமையை பெற்றுள்ளார்.
சர்ச்சை
இந்நிலையில், உதயநிதி தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற திரைப்பட விநியோகஸ்தர்களையும் வியாபாரம் செய்யவிடாமல், சர்வதிகாரம் செய்கிறார் என்று பலரும் விமர்சனம் செய்து வந்தனர். சமீபத்தில் வெளியான கே.ஜி.எஃப் படத்திற்கு குறைவான திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு, தான் வெளியிட்டும் பீஸ்ட் படத்திற்கு மட்டும் அதிக திரையரங்குகள் பெற்றதாக ஒரு சர்ச்சை எழுந்தது.
சீமான் பேச்சு
ஆனால் தற்போது திரைப்பட விழா ஒன்றில் கலந்துக்கொண்டார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அந்த நிகழ்ச்சியில் இதுகுறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ‘ரெட் ஜெயன்ட் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிடுவதால் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். மேலும், உதயநிதி நிறுவனத்தால் திரைத்துறை தற்போது பாதுகாப்பாகவே உள்ளதாக தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்’ என்று சீமான் பதிலளித்தார்.