படகு கவிழ்ந்த விபத்தில் தொலைந்து போன திருச்செந்தூரைச் சேர்ந்த 2 மீனவர்களைத் தேடும்பணியை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சீமான் அறிக்கை
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த செய்தி அறிந்து மனம் மிகுந்த வேதனையடைந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய நான்கு பேரில் நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளார்.
வலியுறுத்தல்
இந்நிலையில், 2 நாட்களாகியும் மீதமுள்ள பிரசாத், அஷ்வின் ஆகிய இரண்டு மீனவர்கள் இன்னும் மீட்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கு தான் காரணம். எனவே தொலைந்து போன மீனவர்களை மீட்பதற்குக் பணியை தீவிரப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

