பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
கனமழை
கேரளாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில், 13 மாவட்ட மக்கள் கடுமையாக பாதித்துள்ளனர். பம்பை ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளா மலைப்பகுதிகளில் அதிக அளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு, இடுக்கி உள்பட அனைத்து அணைகளும் நாளுக்கு நாள் விரைவாக நிரம்பி வருகிறது. அங்குள்ள நெய்யார், பேப்பாறை, அருவிக்கரை உள்பட பல அணைகள் திறக்கப்பட்டு உள்ளன. ஆலப்புழா, இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கல்விக்கூடங்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழைக்கு காரணமாக கடந்த 3 நாளில் 20 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் மதியம் 3 மணிக்கு மேல் பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என பத்தனம்திட்டா ஆட்சியர் தெரிவித்துள்ளார். பம்பை, சபரிமலை பகுதிகளில் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர் அறிவித்துள்ளார்.

