அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சாதிக்கூறி திட்டிய அமைச்சர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் ராஜேந்திரன். இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், பலமுறை சாதி பெயரை சொல்லி அவமானப்படுத்தி தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் ராஜேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார்.
இலாகா மாற்றம்
அதன் தொடர்ச்சியாக ராஜகண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டார். எஸ். எஸ் சிவசங்கர் போக்குவரத்து துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு. சாதியை சொல்லி திட்டிய ஒருவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றம் செய்வது சரியான நடவடிக்கையாக இருக்காது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினார்கள்.
ஏர்போர்ட் மூர்த்தி
இந்நிலையில், பறையர் பேரவையின் நிறுவனர் ஏர்போர்ட் மூர்த்தி, பட்டியலின பிடிஓவை அவமதித்து சாதி பாகுபாடு காட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
நடவடிக்கை
இந்த புகாரை பரிசீலித்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் பட்டியலின பிடிஓவை அவமதித்த ராஜகண்ணப்பன் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராமநாதபுரம் ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டுமென்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.