ராணுவத்தில் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களை பணியில் அமர்த்தும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக சென்னையில் இளைஞர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அக்னிபாத் திட்டம்
ராணுவத்துக்கு ஆள் சேர்க்க ‘அக்னிபாத்’ என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் 17 முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் பணி செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது. இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் நேற்று முன்தினம் 2 ரெயில்களை தீயிட்டு கொளுத்தினர்.
தொடர் போராட்டம்
இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதசேம், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இளைஞர்கள் போராட்டம்
இந்நிலையில், சென்னையில் போர் நினைவு சின்னம் அருகே ராணுவத்தில் சேர முயற்சித்து வரும் இளைஞர்கள் அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
தேர்ச்சி பெற்ற இளைஞர்கள்
2020ம் ஆண்டே இவர்கள் உடற்தகுதி தேர்வை முடித்து எழுத்து தேர்வுக்கு காத்திருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக எழுத்து தேர்வு நடத்தப்படாமல் இருந்தது. இதனால் வயது வரம்பு தகுதி முடியும் நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். மேலும், தற்போது அக்னிபாத் திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் குவிப்பு
போராட்டம் தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு
விரைந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டத்தால் பரபரப்பு நிலவி வருகிறது.
10 சதவீத இட ஒதுக்கீடு
இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்பவர்களுக்கு அசாம் ரைஃபில் படை, துணை ராணுவப் படையில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.