சென்னை ஆதம்பாக்கத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாக தனியாக வசித்து வந்த நபர் வீட்டின் கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆலந்தூர் அடுத்த ஆதம்பாக்கம், பாலகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இமானுவேல் தீபக் (42). இவர் பிறந்த ஒரு வருடத்திலேயே அவரது தந்தை டேவிட் மற்றும் தாயார் நான்சி இருவரும் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் இமானுவேல் தீபக் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு, கடந்த 15 வருடங்களாக அதற்கான சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இமானுவேல் தீபக், பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வீட்டை வாடகைக்கு விட்டு, அதில் வரும் பணத்தை வைத்து, ஆதம்பாக்கம் மஸ்தான் கோரி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த பத்து மாதங்களாக வாடகைக்கு இருந்து வந்துள்ளார். மேலும் அவரது வாடகை வீட்டின் எதிரில், அவரது சித்தி ஷீபா என்பவர் வசித்து வந்த நிலையில், தினமும் அவரது வீட்டில் இமானுவேல் தீபக் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி இமானுவேல் தீபக் ஷீபாவின் வீட்டிற்கு சாப்பிட வராததால், அவர் தனது சகோதரியான வண்டலூரில் வசித்து வரும் ஜூடி என்பவருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார். இதனையடுத்து நேற்று ஜூடி இமானுவேல் தீபக் வசிக்கும் வீட்டிற்கு வந்த போது கதவு உள்பக்கம் தாழிட்டு இருந்துள்ளது. கதவு திறக்க முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கதவினை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இமானுவேல் தீபக், படுக்கை அறையின் கழிவறையில் நிர்வாணமாக மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்கள் அவரின் உடல்நிலையை சோதித்தனர். அதில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆதம்பாக்கம் போலீசார், அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து 194 BNS என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

