தாம்பரம் அருகே 5 சவரன் தங்க நகையுடன் சாலையில் கிடந்த பையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளிக்கு போலீசார் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூர் ராஜாஜி நகரை சேர்ந்தவர் முருகன் (54). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அகரம் சாலை தனியார் நீச்சல் குளம் அருகே நடந்து சென்றபோது சாலையில் பை ஒன்று கிடப்பதை பார்த்துள்ளார்.
இதையடுத்து, முருகன், அந்தப் பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்று தனது மகன் சீனிவாசனிடம் கொடுத்து, சாலையில் கிடந்த பையை எடுத்து வந்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன் சீனிவாசன், அந்தப் பையை திறந்து பார்த்தபோது அதில் 5 சவரன் தங்க நகை இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சீனிவாசன் தனது தந்தை முருகனுடன் சேலையூர் காவல் நிலையத்திற்கு சென்று அந்தப் பை மற்றும் அதிலிருந்து 5 சவரன் தங்க நகைகளை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
சிறிது நேரம் கழித்து சேலையூர் ராஜாஜி நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்த ரேவதி (37) என்பவர் தனது பையை தொலைத்து விட்டதாகவும், அதில் 5 சவரன் தங்க நகைகள் இருந்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, சீனிவாசன் ஒப்படைத்த பையை காண்பித்து, அது ரேவதியின் காணாமல் போன பை என்பதை உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அந்தப் பை மற்றும் அதிலிருந்து 5 சவரன் தங்க நகையை சேலையூர் போலீசார் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அவர் சாலையில் தவற விட்ட பையை கூலித் தொழிலாளி முருகனும், அவரது மகன் சீனிவாசனும் காவல் நிலையத்தில் கொண்டு வந்து கொடுத்த விவரத்தையும் அவரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக ரேவதி தெரிவித்தார்.
பின்னர், சாலையில் கிடந்த 5 சவரன் தங்க நகையை நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த கூலி தொழிலாளி முருகன் மற்றும் அவரது மகன் சீனிவாசனை சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து சேலையூர் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார், அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்து பாராட்டினர்.

