வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைத்திருந்த 43 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ளது பல்லாலகுப்பம் கிராமம். இங்குள்ள காப்புக்காட்டில் பேர்ணாம்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், அவர்கள் வைத்திருந்த பொருட்களை வாங்கி, வனத்துறையினர் சோதன செய்தனர். அப்போது, அதில் 43 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை செய்தபோது, அவர்கள் ஆயிரங்குளம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(27) மற்றும் ஜெயபால் (37) என்பது தெரியவந்தது. மேலும் அந்த நாட்டு வெடிகுண்டுகளை வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக அவர்கள் கொண்டு சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து, தனசேகர், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், 43 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க.. இளைஞர் காரில் கொண்டு சென்ற 12 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் – பறக்கும் படை அதிரடி
வனப்பகுதியில் 43 நாட்டு வெடிகுண்டுகளை வனத்துறையினர் பறிமுதல் செய்துள்ள சம்பவம், அந்த பகுதியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு குறித்து கவலையை ஏற்படுத்தி உள்ளது.

