மதுரை என்றாலே திருவிழா உணர்வு தானாக தொற்றிக் கொள்ளும். பிறப்பு முதல் இறப்பு வரை கொண்டாடி தீர்ப்பவர்கள் மதுரைக்காரர்கள். நாகரிகத்திலும், பண்பாட்டிலும் உயிர் துடிப்போடு இயங்குகின்ற ஒரு மாபெரும் நகரம் மதுரை.
மீனாட்சிக் கல்யாணமும், அழகரின் வைகை ஆற்று வைபவமும் மதுரை மக்களின் வாழ்வியலோடு கலந்துவிட்ட ஒன்று. ஒரு மாதம் முழுவதும் தயாராகி அதிக நாட்கள் கொண்டாடப்படும் ஒரே திருவிழா சித்திரை திருவிழா தான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழா உருவான வரலாறு சுவாரஸ்யமானது.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அழகர் கோயில் சார்பாக தனித்தனியாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தன. அது பெரும்பாலும் சைவ-வைணவ மோதலாகவே முடிந்தது. சமயங்களிடையே ஒற்றுமையை உண்டாக்கும் ஒரு முயற்சியாகவே பின்னாட்களில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டுள்ளன. மாசி மாதம் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாண திருவிழாவை, அறுவடை காலமென்பதால் வேளாண்மை பெருமக்களால் காணமுடியாமல் இருந்ததால் அந்த விழா சித்திரை மாதத்திற்கு மாற்றப்பட்டது.
சைவ மற்றும் வைணவ சமயங்கள் ஒன்றாக கொண்டாடும் திருவிழா இதுவே ஆகும்.
ஆரம்பத்தில் மதுரை சோழவந்தானிலுள்ள தேனூரில் நடந்த திருவிழா, பின்னர் மதுரை நகருக்கு மாற்றப்பட்டது. 400 ஆண்டுகளாக தொன்றுதொட்டு சித்திரைத் திருவிழா வரலாற்று பெருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. இன்றும் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு, மதுரை மக்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து குவிகின்றனர்.
புராணக் கதையின் படி, மலையத்தவ பாண்டியன் மற்றும் ராணி காஞ்சனமாலாவின் மகளாக அக்னியில் தோன்றியவள் மீனாட்சி. சிறு வயது முதலே போர் கலைகளில் சிறந்தவளாக திகழ்ந்து உலகின் எல்லா பகுதிகளையும் வெற்றி கொண்ட மீனாட்சி, இறுதியாக கயிலாயம் சென்று சிவபெருமானுடன் போரிட்டார். அக்கனமே அவர் மேல் காதல் வயப்பட்டு, தான் பார்வதியின் அவதாரம் என்பதையும் உணர்ந்துக் கொள்கிறார் மீனாட்சி.
தன் அவதாரத்தின் காரணத்தை அறிந்த சக்தி ஈசனின் கரம் பிடிக்க வேண்டுகிறாள். சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சிக்கு திருமணம் நிச்சம் செய்யப்படுகிறது. பின் இத்திருக்கல்யாண நிகழ்வு நடைபெறுகிறது. மீனாட்சியை திருமணம் செய்த பிறகு மதுரையை ஆளும் ‘செங்கோல்’, சுந்தரேஸ்வரரிடம் கொடுக்கப்படுகிறது. பாண்டிய நாட்டை ஆளுவதால் சுந்தரபாண்டியன் எனும் பேரால் குறிப்பிடப்படுகிறார். இந்த நிகழ்வோடு மீனாட்சி திருக்கல்யாண திருவிழா முடியும்.
ஆனால், அக்காலத்தில் இடம்பெற்ற சைவ வைணவர்களின் மோதல்களை தவிர்க்க முயன்று ஒரு புனைவு கதை சேர்க்கப்பட்டது. தன் தங்கை திருமணத்திற்கு செல்லும் அழகர், திருமணம் முடிந்தது என்று தெரிந்ததவுடன், வைகை நதியில் இறங்கி திரும்புவதாக இந்த புதிய புராண கதைகள் சொல்கிறது. இன் நிகழ்வு நடைபெருவதற்கான காரணம் மண்டூக ரிஷி அவர்களின் சாப விமோசனம் தருவதற்காக என கூறப்படுகிறது.
ஒரு முறை மண்டூக ரிஷி நதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது துர்வாச முனிவர் அங்கு வருகிறார். அவர் வருவதை காணாத மண்டூக ரிஷியை, தன்னை அவமதித்து விட்டார் என துர்வாச முனிவர் மண்டூகருக்கு ‘வைகை நதியிலே நீ தவளையாக இருப்பாயாக’ என சாபம் விடுகிறார். அவரது சாப விமோச்சனம் போக்கவே கடவுள், விஷ்ணு அவதாரம் எடுத்து வருவதாக இந்நிகழ்வு கூறுகிறது.
சித்திரை திருவிழா கொண்டாடபடுவதன் காரணம் இதுவே. கொரோனா காரணமாக சித்திரை திருவிழா நடத்தபடாமல் இருந்துவந்தது. மீண்டும் இவ்வருடம் கோலாகலமாக கலைகட்ட தொடக்கி இருக்கிறது சித்திரைத் திருவிழா!