அரசியல்சமூகம்தமிழ்நாடு

தமிழகத்தில் 6,162 முழு நேர ரேஷன் கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது – அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!

தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்காக சட்டப்பேரவை மீண்டும் கூடியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அமைச்சர்கள் பதிலளித்தனர்.

சட்டப்பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர் “எனது தொகுதியில், ஒரு நியாய விலை கடைக்கு 1000-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் இருக்கின்றன. இதனால் அங்கு கூடும் கூட்டத்தின் காரணமாக பொருட்கள் வாங்கமுடியாத சூழ்நிலை உள்ளது. எனவே, அனைத்து பகுதிகளிலும் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகளை இரண்டாக பிரிக்கவேண்டும்.

அதேபோல் ஒன்றரை கிமீ. தொலைவுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் குறித்து ஆய்வு செய்து பகுதிநேர அங்காடிகள் ஏற்படுத்த வேண்டும். அதோடு மட்டுமின்றி, 3 கடைகளுக்கு ஒரு விற்பனையாளர் பொறுப்பாக உள்ளார். எனவே, பகுதிநேர கடைகள் பிரிக்கப்படும்போது அங்கு ஒரு விற்பனையாளரையும் நியமித்தால்தான் முழுமையாக பொருட்களை வழங்க முடியும். அதற்கான வாய்ப்பு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி:

“ஆயிரம் அட்டைகள் உள்ள கடைகள், ஆயிரம் அட்டைகளுக்கு மேல் உள்ள கடைகள், 5,6 கிராமங்களை இணைத்து செயல்படுகின்ற கடைகள், தூரம் அதிகமாக உள்ள கடைகள் என இப்படி பல்வேறு நிலைகளில் கடைகள் பிரிக்கப்படாமல் இயங்கி வருகிறது. இதுதொடர்பாக அரசு ஆய்வு செய்து வருகிறது.

இதேபோல், நகர்ப்புறங்களில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகள் மிக நெருக்கடியான பகுதிகளில் அமைந்துள்ளன. அதுவும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நிறைய இடங்களில் ஆயிரம் கார்டுகளுக்கு மேல் உள்ளது. இதுபோன்ற இடங்களில் வாடகை கட்டிடங்கள் கிடைப்பதோ, அரசு இடங்கள் இருப்பதற்கோ சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாக உள்ளது.

எனவே இதை பிரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. மாநகராட்சி பகுதிகள், நகராட்சி பகுதிகள், கிராமப்புற பகுதிகள் என பிரித்தால் உண்மையாகவே பயனளிக்குமா என்று உணவுத்துறையுடன் பேசி முடிவெடுக்க உள்ளோம். அதேபோல் ஒரு முழுநேர நியாய விலைக் கடையை நடத்த அதற்கான ஊதியம், செலவு அனைத்தும் சேர்த்து 3 லட்ச ரூபாய் செலவாகிறது. கடைகளின் எண்ணிக்கையைப் பார்க்கின்றபோது, 6,162 முழு நேர கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டிய அவசியம் உள்ளது. இதோடு 773 பகுதிநேர கடைகளுக்கு கட்டிடம் கட்ட வேண்டியிருக்கிறது.

முழு நேர கடைகளை ரூ.10 லட்சத்திலும், பகுதி நேர கடைகளை ரூ.7 லட்சத்திலும் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. கார்டுகளின் எண்ணிக்கை, கடையின் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் பகுதிநேர கடைகள் அமைப்பது தொடர்பாக பேசிக் கொண்டிருக்கிறோம். எனவே இதுதொடர்பாக அரசு விரைவில் முடிவெடுக்கும்” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.

Related posts