பெரம்பலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து, வீட்டில் இருந்தவரை இரும்பு கம்பியால் தாக்கி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பாண்டியனின் குடும்பம்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அம்மாபாளையம் கிராமத்தில் வசிப்பவர் பாண்டியன், இவரின் மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதிக்கு ரம்யா என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். விக்னேஷ் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். மகள் ரம்யாவுக்கு திருமணமாகிவிட்டது. கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால், ரம்யா தனது மகளுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
மர்ம நபர்கள்
இந்நிலையில் நேற்று இரவு பாண்டியனின் மனைவியும், மகளும் வீட்டின் மொட்டை மாடியில் உறங்கி கொண்டிருந்தார்கள். பாண்டியன் மட்டும் வீட்டுக்குள் தனியாக உறங்கி கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்து வந்த ஐந்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து கொண்டு வீட்டுக்குள் புகுந்தனர். வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பாண்டியனை இரும்பு கம்பியால் தாக்கினார்கள். சத்தம் கேட்டு கீழே வந்து பார்த்தார் ரம்யா. இதனையடுத்து ரம்யா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 5 சவரன் தாலிச்செயின், அவரது கையில் அணிந்திருந்த மோதிரம் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டனர். மேலும், பாண்டியனின் கார் சாவியையும் மிரட்டி வாங்கிகொண்டு வீட்டின் முன் பக்கம் நின்றிருந்த காரை எடுத்து தப்பிச் சென்றனர். உடனே ரம்யா பெரம்பலூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

கைரேகை நிபுணர்கள்
இந்த நிலையில் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அந்த இடத்தை ஆய்வு நடத்தி, கைரேகை நிபுணர்களை வரவழைத்தனர் மற்றும் போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திரைப்படங்களில் வருவது போன்று நடந்த இந்த முகமூடி கொள்ளை அப்பகுதி மக்களிடயே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

