மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு முன்பிருந்தே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. திடீரென்று யாரோ ஒருவர் நான்தான் ஜெயலலிதாவின் வாரிசு என்று அதிரடியாக பேட்டி கொடுத்து, சில நாட்களில் எங்கே போனார் என்றுகூட தெரியாத அளவுக்கு அந்த சம்பவம் முடிந்துவிடும். அதன் பிறகு அவர்களை பற்றிய தகவல்கள் கூட நமக்கு கிடைக்காது. இந்த வாடிக்கையான சம்பவம் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகும்கூட நடந்துகொண்டுதான் இருந்தது.
ஜெயலலிதா மறைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது ஒருவர் நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அனைவருக்கும் அதிர்ச்சியளித்து வருகிறார். அவர்தான் மதுரையை சேர்ந்த மீனாட்சி.
மீனாட்சி ஜெயலலிதாதான் தன் தாயார், போயஸ் கார்டனில் வாழ்ந்து மறைந்து விட்டார் என கூறி ஆன்லைன்னில் அதிகாரிகளிடம் வாரிசு சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகத்தை அதிரவிட்டிருக்கிறார்.
ஆன்லைன்னில் இவரது மனு அதிகாரிகளால் நிராகரிக்கப்பட, நேராகவே தாசில் தார் அலுவலகத்திற்கே சென்றுவிட்டார். அங்கிருந்த அதிகாரிகளிடம் “நான்தான் ஜெயலலிதாவின் மகள், அத்தை சசிகலாவின் கணவர் நடராஜன் மாமாவுக்கு இது தெரியும்” என கூறியுள்ளார். மேலும் நீதிமன்றம் சென்றாவது நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்ற உண்மையை வெளிகொண்டுவருவேன் என்று பேசி இருக்கிறார்.
ஏன் சொல்லவில்லை
‘நீங்கள் தான் ஜெயலலிதாவின் மகள் என்று ஏன் இவ்வளவு நாளாக சொல்லவில்லை?’ என்ற கேள்விக்கு மீனாட்சி கொடுத்துள்ள பதில்: நான்தான் ஜெயலலிதாவின் மகள் என்று சொன்னால் எனக்கு நிறைய மிரட்டல்கள் வரும் , என்னை கொலைகூட செய்து இருப்பார்கள். உயிரோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அமைதியாக இருந்தேன். இனிமேல் இருக்கமாட்டேன். நான் கருப்பாக இருப்பதால் என்னை ஜெயலலிதாவின் மகள் என்று ஏற்க மறுக்கிறார்கள். இதை நான் இப்படியே விட்டுவிட போவதில்லை, இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலினிடம் மனுகொடுக்க போகிறேன் என்று கூறியுள்ளார்