சிங்காநல்லூர் அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 70 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் நகை கடை மற்றும் நகை அடகு கடை ஒன்றை ரமேஷ்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இந்த கடையின் பின்புறத்தில், ரமேஷ்குமாரின் வீடு உள்ளது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர், குடும்பத்துடன் கோயிலுக்கு சென்றுள்ளார்.
அதனை நோட்டமிட்ட மர்ம கும்பல், நேற்றிரவு சுமார் 11 மணியளவில் கடையின் பின்புறமுள்ள ஷட்டரை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் 20 கிலோ வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதற்கிடையே, கோயிலில் இருந்து திரும்பி வந்த ரமேஷ்குமாருக்கு கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீதிபதியை நோக்கி அரிவாள் வீச்சு; ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் அதிர்ச்சி சம்பவம்
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் தடயவியல் சோதனை நிபுணர்களின் உதவியுடன் கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளின் அடிப்படையில், நகைக்கடையில் கொள்ளையடித்துவிட்டு தப்பிய திருடர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷ்குமாரிடம் விசாரித்தபோது, சுமார் ஒரு கோடிக்கும் மேல் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

