சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

காவல் குடியிருப்பு : தாய் அடித்துக்கொலை – எஸ்.பி அலுவலகம் அருகில் துனிகரம் !

எஸ்.பி அலுவலகம் அருகே போலீஸ்காரரின் தாய் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கடலுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் குடியிருப்பு

கடலுார் எஸ்.பி, அலுவலகம் பின்புறம் ஆயதப்படை மைதானம் அருகே பழைய காவல் குடியிருப்பு உள்ளது. நேற்று மாலை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், டி.எஸ்.பி கரிகால் பாரி சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைத்து தடயங்களை சேகரிக்கப்பட்டது.அப்போது மோப்ப நாய் ஆனைக்குப்பம் மெயின்ரோடு வரை ஓடி நின்றது. ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், கொலை செய்யப்பட்டு கிடந்த பெண்ணின் புகைப்படம் வாட்ஸ் ஆப்பில் பரவ, அவர், கடலுார் ஆயுதப்படையில் பணிபுரியும் சிவகுரு என்பவரது தாய் மலர்கொடி (54) என தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கொலை செய்யப்பட்ட மலர்கொடி, பண்ருட்டி அடுத்த உள்ள காங்கிருப்பு கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆய்வாளர் சதாசிவம் என்பவரது மனைவி என்று தெரியவந்தது. காங்கிருப்பில் வசித்து வந்த மலர்கொடிக்கு உடல் நிலை சரியில்லாததால், கடலுார் ஆனைக்குப்பம் குடியிருப்பில் வசித்துவரும் மகன் சிவகுருவை பார்க்க நேற்று காலை வந்ததாக கூறப்படுகிறது. மலர்கொடி காதுடன் தோடு அறுந்து கிடந்ததால், அவர் நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் குறித்து கடலுார் புதுநகர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி அலுவலகம் அருகில் உள்ள காவல் குடியிருப்பு பகுதியிலேயே நடந்த துணிகர சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts