மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளதால் கோயம்பேடு காய்கறி அங்காடிக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் தக்காளியின் விலை சற்று குறைந்துள்ளது.
காய்கறிகள்
நம் அன்றாட வாழ்வில் சமையலுக்கு முக்கியமாக பயன்படுவது காய்கறிகள். கடந்த சில மாதமாகவே காய்கறியின் விலையானது அதிகரித்துக்கொண்டே வந்தது. கடந்த வாரத்தில் பெய்த மழையின் காரணமாகவும் பெட்ரோல் டீசல் விலை உயர்வாலும் பிற மாநிலங்களின் இருந்து வரும் தக்காளியின் வரத்து குறைந்து. இதன்தொடர்ச்சியாக தான் சென்னையில் தக்காளி உள்பட மற்ற காய்கறிகளின் விலையானது உயர்ந்தது.
விலை ஏற்றம்
கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலர் மதிப்பு அதிகரிப்பால் பெட்ரோல் டீசல் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனால் கர்நாடக, தெலுங்கானா, மகாராஷ்ரா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யும் தக்காளியின் வரத்து குறைந்தது. இதன்காரணமாக தக்காளியின் விலை சென்ற வாரம் சென்னை கோயம்பேடு சந்தையில் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
டீசல் விலை குறைப்பு
இந்நிலையில், சென்ற வாரம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை 9 ரூபாய் 50 காசும், டீசல் விலை 7 ரூபாயும் குறைந்தது. தற்போது டீசல் விலை ஒரு லிட்டர் 94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்தொடர்ச்சியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் தினமும் கோயம்பேடு சந்தைக்கு வரும் தக்காளியின் வரத்து அதிகரித்துள்ளது.
தக்காளி விலை குறைவு
கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி கோயம்பேடு மார்கெட்டில் மொத்த விலையில் 1 கிலோ இரண்டாம் ரகம் தக்காளி 50 ரூபாய் என்றும், ஒரு கிலோ முதல் ரகம் தக்காளி 60 ரூபாய் என்றும் விற்கப்படுகிறது. சில்லறைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.