திருமாலின் உலகமாக கருதப்படும் வைகுண்டம், சொர்க்கமாக போற்றப்படுகிறது. அத்தகைய வைகுண்டத்திற்கு இணையாக போற்றப்படும் ஒரு கோவில் இந்த பூ உலகில் உள்ளது என்றால் அது தான் குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவில்.
வைணவர்களின் புனித தலமாக போற்றப்படும் இந்த கோவில் 108 திவ்ய தேசக் கோவில்களில் இடம் பெறவில்லை. ஆனால் அதையும் கடந்து இது பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த கோவில் குருவாயூரப்பன் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த உலகில் அவதாரம் எடுப்பதற்கு சற்று முன்பு தன் தந்தையான வாசுதேவருக்கும் தாய் தேவகிக்கும் குருவாயூரில் தான் எப்படி உள்ளாரோ அதே போல காட்சி அளித்துள்ளார்.
அதனால் இந்த கோவில் தென் துவாரகை என்றும் போற்றப்படுகிறது.
குருவாயூர் கோவில் குளத்தில் சிவபெருமான் ருத்ரனாக இருந்து மகாவிஷ்ணுவை போற்றி கடும் தகவல் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் இந்த குளத்தின் தீர்த்தமானது ருத்ர தீர்த்தம் என்று போற்றப்படுகிறது.
புண் முறுவலோடும் கம்பீர தோற்றத்தோடும் இங்கு காட்சி தரும் கிருஷ்ணர், தனது நான்கு கரங்களில் சங்கு,சுதர்சன சக்கரம், தாமரை, கதை ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறார்.
இந்த கோவிலில் உள்ள மூலவரின் விகிரகத்திற்கு தனி சிறப்பு உண்டு. இதை வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவே படைத்து அதை சிவனிடமும் ப்ரம்ம தேவனிடமும் கொடுத்ததாக நம்பப்படுகிறது.
தல வரலாறு :
சுதபர் என்னும் அரசன் தன் மனைவியோடு குழந்தை வரம் வேண்டி பிரம்ம தேவனை நோக்கி தவம் இருந்தார். தவத்தை மெச்சிய பிரமதேவன் அவர்களிடம் இந்த விக்ரகத்தை கொடுத்து பூஜிக்க கூறினார்.
அதன்படி அவர்கள் பூஜிக்கையில் மகாவிஷ்ணுவே வந்து அவர்களுக்கு மகனாக மூன்று முறை வெவ்வேறு காலகட்டத்தில் பிறப்பதாக வரம் அளித்தார்.
அதன் படியே அவர் பிரசனிகர்பராகவும், வாமனராகவும், கிருஷ்ணராகவும் அதே தம்பதிக்கு வெவ்வேறு யுகத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது.
கிருஷ்ணாவதாரம் முடியும் தருவாயில் அந்த விக்கிரகம் உத்தவரிடம் கொடுக்கப்பட்டது. துவாரகையில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் துவாரகை கடலில் மூழ்கிப்போக இந்த விக்ரகம் கடலில் மிதந்தவண்ணம் இருந்தது.
இதை கண்ட வாயுவும் குருவும் அந்த விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ய ஒரு நல்ல இடம் தேடி உலகெங்கும் சுற்றி வந்தனர். அவர்கள் பரசுராமரை பாலக்காட்டில் சந்தித்தனர். அனைவரும் சேர்த்து ஒரு நல்ல இடத்தை தேடினர்.
அங்கு இருந்த ஒரு குளத்தில் சிவபெருமான் வாசம் செய்வதை உணர்ந்த அவர்களுக்கு சிவன் பார்வதியோடு தரிசனம் தந்து அங்கேயே விக்ரகத்தை பிரதிஷட்டை செய்ய ஆசியும் வழங்கியுள்ளார்.
இத்தகைய சிறப்பு பெற்றது குருவாயூர் கோவில் மூலவர் விக்ரகம். இப்படி பல சிறப்புக்கள் நிறைந்ததாலேயே குருவாயூர் கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுகிறது.