தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் மகனை அடித்துக் கொன்றவரை கல்லால் தாக்கிக் கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரைச் சேர்ந்தவர்கள் மாதேவப்பா – தொட்டம்மா தம்பதி. இவர்களுடைய மகன் ராகவன், தனது பாட்டி சிக்கம்மா வீட்டில் தங்கி 6 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி பாட்டி சிக்கம்மா – ராகவன் இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.
இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாளவாடி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் கொலையாளியை தேடி வந்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த நாகேஷ் (40) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இதில், சிக்கம்மா – ராகவன் இருவரையும் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
இது தொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், மாதேவப்பாவின் அண்ணன் இறந்த நிலையில் அவருடைய மனைவி பாக்யா தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கும் நாகேஷுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதை சிக்கம்மா ஊர் மக்களிடையே பரப்பியதால், ஆத்திரமடைந்த நாகேஷும் பாக்யாவும் அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சிக்கம்மாவையும் அவருடன் தங்கியிருந்த பேரன் ராகவனையும் கொலை செய்து, அவருடைய வீட்டிலிருந்த 30 கிராம் தங்கச் செயினையும், அவருக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரத்தில் வைத்திருந்த மற்றொரு 30 கிராம் செயினையும் திருடிச் சென்றுள்ளனர்.
நாகேஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் பாக்யாவிற்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வரவே, இருவரையும் தாளவாடி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் நீதிமன்ற ஜாமீனில் வெளியே வந்த நாகேஷ், தனது உறவினர்களை பார்ப்பதற்காக தொட்டகாஜனூருக்கு வந்துள்ளார். தங்கள் மகனை கொலை செய்த நாகேஷை பார்த்ததும் ஆத்திரமடைந்த மாதேவப்பா – தொட்டம்மா தம்பதி, பழி தீர்க்கும் நோக்கில் நாகேஷை கல்லால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் தாளவாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, உடனடியாக அங்கு வந்த போலீசார் நாகேஷை மீட்டு, தாளவாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாகேஷ் உயிரிழந்தார்.
இது தொடர்பாக தொட்டம்மா (31), அவரது கணவர் மாதேவப்பா (41) ஆகியோரை தாளவாடி போலீசார் கைது செய்து சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

