காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மறைத்து வைத்திருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்த காவல் துறையினர், இரண்டு பேரை அதிரடியாக கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே காயல்பட்டினம், மாட்டுக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு ரோந்துச் சென்ற ஆறுமுகநேரி காவல் துறையினர், காயல்பட்டினம் சுலைமான் நகரில் உள்ள பீர் முஹம்மது (வயது 37) என்பவரது கடையை அதிரடியாக சோதனை செய்தனர்.
அப்போது விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுமார் 3.750 கிலோ அளவிலான புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து பீர் முஹம்மதுவிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராணி மகாராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாலகணேஷ் (வயது 36) என்பவரிடம் இருந்து புகையிலைப் பொருட்களை வாங்கியது தெரிய வந்தது.
இதையடுத்து காவல் ஆய்வாளர் திலீபன் தலைமையிலான காவலர்கள், ஆறுமுகனேரி செக்போஸ்ட்டில் பதுங்கி இருந்து கண்காணித்தனர். இதற்கிடையே காவல் துறையினர், பாலகணேஷ் தொலைபேசி எண்ணை டிராக் செய்தனர். அதில் பாலகணேஷ் தூத்துக்குடியில் இருந்து ஆறுமுகநேரி நோக்கி வந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், செக்போஸ்டில் காவல்துறையினரைக் கண்டதும் பாலகணேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் பாலகணேஷ் காயல்பட்டினம் பைபாஸ் சாலையில் உள்ள பழைய கட்டடத்திற்கு பின்புறம் புகையிலை மூட்டைகளை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது.
அதனை தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற காவல்துறையினர், அங்கிருந்த ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 34 மூட்டைகளில் இருந்த 400 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அத்துடன், பீர் முஹம்மது, பாலகணேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்கும் வகையில் அந்தந்த மாவட்டங்களின் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர்இணைந்து மளிகைக்கடைகள், பெட்டிக்கடைகளில் அவ்வப்போது சோதனை நடத்தி அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

