தூத்துக்குடி அருகே காதல் திருமணம் செய்த புதுமண தம்பதியை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தை கைது.
வெட்டி கொலை
எட்டையபுரம் அருகே உள்ள வீரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முத்துகுட்டி (50). இவருடைய மகள் ரேஷ்மா (20) கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவர்களது எதிர்வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல் மகன் கூலி தொழிலாளி மாணிக்கராஜ் (26). ரேஷ்மா, மாணிக்கராஜ் இருவரும் உறவினர்கள் என்பதால் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவரவே, தனது மகளின் காதலுக்கு முத்துகுட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 29ம் தேதி காதலர்கள் இருவரும் மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கு திருமணம் செய்து கொண்டனர். அங்கு சில நாட்கள் தங்கி இருந்து வந்தனர்.
பின்னர் சில நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதியர் இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்துக்கு வந்துள்ளனர். அங்கு மாணிக்கராஜின் வீட்டில் வசித்து வந்தனர். புதுமண தம்பதியர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர். வேலை முடிந்து வந்த மாணிக்கராஜின் தாய் மகாலட்சுமி வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் மகன் மாணிக்கராஜூம், மருமகள் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். இதனை கண்டதும் தாய் மகாலட்சுமி கதறி அழுதுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து எட்டயபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ், எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.
இதையடுத்து புதுமண தம்பதியின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், மகளின் காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை முத்துகுட்டி ஆத்திரத்தில் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. பின்னர், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த முத்துக்குட்டியை போலீசார் கைது செய்தனர். திருமணமான 26 நாளில் புதுமண தம்பதியை பெண்ணின் தந்தையே வெட்டிக்கொன்ற பயங்கர சம்பவம் எட்டையபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

