தமிழகம் முழுவதும் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், தர்பூசணி பழ விற்பனை அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ள மக்கள் சாலையோர கடைகளில் தர்பூசணி பழங்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.
தமிழகத்தில் கோடை சீசன் தொடங்கி, வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், தர்பூசணி பழத்தின் விற்பனை தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக, தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலையோரங்களில் தர்பூசணி கடைகள் அமைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தாகத்தை தணிக்கவும் மக்கள் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடைகளில் தர்பூசணி பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இதனால் தர்பூசணி பழ விற்பனையும் அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மதுரை சாலையில், சாலையோரம் உள்ள தர்பூசணி பழக் கடையில் பொதுமக்கள் அதிகளவில் தர்பூசணி பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து தர்பூசணி பழ வியாபாரி சிவராமன் கூறுகையில், “இந்த தர்பூசணி பழங்களை, ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா, நெல்லூர், விஜயவாடா ஆகிய பகுதியில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்து வருகிறோம்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தர்பூசணியின் விலை அதிகரித்துள்ளது. போன வருடம் மொத்த விற்பனையில் கிலோ 10 முதல் 12 ரூபாய்க்கு எங்களுக்கு விற்பனை செய்தனர். இந்த ஆண்டு கிலோ 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் தர்பூசணி பழங்கள் எடுத்து வருவதற்கு போக்குவரத்துச் செலவு ஆகியவை சேர்த்து சில்லறை விற்பனையில் கிலோ ஒன்றுக்கு 25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை வைத்து தர்பூசணி பழங்கள் விற்பனை செய்து வருகிறோம். இனி வரும் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க கூடும் என்பதால், தர்பூசணி பழத்தின் விற்பனையும் மேலும் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.

