சவர்மா சாப்பிட்டு பரிதாபமாக உயிரிழந்த கேரள மாணவியின் மரணத்தை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
கேரள மாணவியின் மரணம்
இரு தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் சேருவத்தூர் பகுதியில் உள்ள ஒரு துரித உணவகத்தில் மாணவிகள் குழுவாக சென்று சவர்மா சாப்பிட்டுள்ளனர். சவர்மா சாப்பிட்ட 15 பேருக்கும் கடுமையான காய்ச்சல் ,வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி மட்டும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மற்ற 14 மாணவிகள் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மாணவிகள் சாப்பிட்ட சவர்மா தான் இதற்கு காரணம் என்று தெரியவந்தது.
அதிகாரிகளின் அதிரடி ஆய்வு
கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து, தமிழகத்தில் உள்ள பல்வேறு சவர்மா கடைகளில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி அனுராதா தலைமையில் தலா 5 பேர் கொண்ட 2 குழு பிரிந்து சென்று காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட ரங்க சாமி குளம், காவலன் கேட், கீரை மண்டபம், காமாட்சி அம்மன் சன்னதி வீதி உள்ளிட்ட 13 இடங்களில் இயங்கும் சவர்மா கடைகளை ஆய்வு செய்தனர்.
உணவு மாதிரிகள் ஆய்வு
சவர்மா கடைகளில் பயன்படுத்தும் கோழிக்கறி மற்றும் மூல பொருட்களை ஆய்வு செய்து, கடைகளில் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பி தரத்தை கண்டறிந்து வருகின்றனர்.
அபராதம்
தரமான பொருட்களை கொண்டு தான் உணவுகளை தயார் செய்கிறீர்களா? என்று கடை உரிமையாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பாதுகாப்பில்லாத பிளாஸ்டிக் பயன்படுத்தி சவர்மா தயாரிக்கும் கடைகளுக்கு தலா.2000 ரூ அபராதம் விதித்தனர்.
காவலன் கேட் பகுதியில் இயங்கும் ஒரு சவர்மா கடையில் பழைய கோழிக்கறிகளை பயன்படுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் கடையில் உள்ள மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக கிண்டி அனுப்பியிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.