ஆதிச்சநல்லூர் அகழாய்வு பணியில் முதல் முறையாக 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு
ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் ஆதிச்சநல்லூர். மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குனர் அருண்ராஜ் தலைமையிலான குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதிச்சநல்லூர் பரும்பு, பாண்டியராஜா கோவில் அருகில், புளியங்குளம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 8 பிரிவுகளாக அகழாய்வு செய்யப்படு வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மண்பாண்ட பொருட்கள், இரும்பாலான ஆயுதங்கள், தங்க காதணி, பட்டயம் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் பாண்டியராஜா கோவில் அருகில் தொல்லியல் துறையினர் 8 இடங்களில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்தனர். அங்கு ஒரு குழியில் 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் அருகில் சில மண்பாண்ட பொருட்களும் இருந்தன. ஆதிச்சநல்லூர் அகழாய்வில் இதுவரையிலும் ஒரு மூடியுடன் கூடிய முதுமக்கள் தாழியே கண்டறியப்பட்டு குறிப்பிடப்பட்டது. 2 மூடிகளுடன் கூடிய முதுமக்கள் தாழியை தொல்லியல் துறையினர் திறந்து ஆய்வு செய்தனர். அந்த மண்பானையில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் போன்றவை இருந்தன.

