ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க அவசரச் சட்டம் கொண்டுவர, ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆன்லைன் சூதாட்டங்கள்
அனைத்து வகையான ஆன்லைன் சூதாட்டங்களும் சமூகத்தில் தொடர்ந்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி நாட்டில் தலைவலியை ஏற்படுத்துகிறது. ஆரம்பத்தில் வெறும் பொழுது போக்கிற்காக மட்டுமே விளையாடத் தொடங்குகிறார்கள். பின்னர் பணத்தை வைத்து விளையாடும் அளவிற்கு ஒருவித போதையாக மாறுகிறது.
தற்கொலை
அதில் பணத்தை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மேலும், பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்வதும் வழக்கமாக உள்ளது. இப்படி தான் சென்னை மணலியைச் சேர்ந்த 29 வயதான பவானி என்பவர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையானர். அதனால் இதுவரை அவர் சுமார் 3 லட்ச ரூபாய் வரை இழந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாவனி தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
அறிக்கை
இதனால் தமிழக அரசு சார்பில் ரம்மிக்கு எதிராக அவசரச் சட்டம் ஒன்று கொண்டுவர ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துபவவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுப்படுபவர்களும் அதிகரித்து வருகிறார்கள். இதில் பணத்தை இழப்போர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.
குழு அமைத்த அரசு
இந்நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், போலீஸ் கூடுதல் இயக்குநர் வினித் தேவ் வான்கடே ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு அடுத்த இரு வாரங்களில் தங்கள் பரிந்துரையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.