காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார்.
தற்கொலை முயற்சி
காஞ்சிபுரம் ஒரிக்கை பகுதியில் உள்ள தனியார் பள்ளியான பாரதிதாசன் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆர்பாக்கம் பகுதியை சேர்ந்த இஷிகாந்த்(16) என்ற மாணவன் 11ம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில், நேற்று மாலை பள்ளி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த மாணவணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் மாணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கள்ளக்குறிச்சியில் மாணவி தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து அங்கு போராட்டம் மற்றும் கலவரம் ஏற்பட்டதை போல் காஞ்சிபுரத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் 50 அதிவிரைவு படையினர் தற்போது இப்பள்ளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ள முயல்வது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

