மாமியார்-மருமகள் சண்டை திருத்து வைப்பதாக சொல்லி மாந்திரவாதி 4 சவரன் நகையை ஏமாற்றி பறித்து சென்ற நபரை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
மாமியார் – மருமகள் சண்டை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த கெங்காபுரம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேற்று காலை இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அப்பகுதி உள்ள பெண்களிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அந்த பெண்களிடம் தனக்கு மாய மாந்திரீகம் தெரியும் என்றும் என்னால் மாமியார்- மருமகள் சண்டைகளை நொடி பொழுதினில் தீர்க்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும் தன்னால் வீட்டில் இருக்கும் நகைகளை இரட்டிப்பாக்க முடியும் யாருக்கேனும் மாமியார் – மருமகள் சண்டைகள் இருந்தாலோ நகைகளை இரட்டிப்பாக்க வேண்டும் என்றால் நான் செய்து தருகிறேன் என கூறியுள்ளார்.

இவரத்தின் மாயாஜால வார்த்தைகளை நம்பி கவிதா என்ற பெண் தன் வீட்டில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை அந்த மந்திரவாதியிடம் கொடுத்துள்ளார். அப்போது அந்த நகை தங்கம் தானா என்பதை உறுதிசெய்துகொள்ள, ‘இது தங்கம்தானேம்மா, இல்லை என்னோட மாந்திரீகத்தை சோதிச்சி பார்க்க கவரிங் நகையை கொண்டு வந்தீர்களா’ என கேட்டுள்ளார்.
தங்க நகைகள் இரட்டிப்பு
அதற்கு கவிதா, ‘இல்லை இது சுத்தமான தங்கததால் செய்யப்பட்ட சங்கிலி. இது 4 சவரன். இதை 8 சவரனாக மாற்றிக் கொடுங்கள்’ என கேட்டுள்ளார். இது தங்கம் தான் என உறுதி செய்துகொண்ட அந்த நபர். மேலும், அந்த நபர் சுற்றி முற்றி பார்த்து யாருமில்லை என்பதையும் தெரிந்து கொண்ட உடனே அந்த நபர் 4 சவரன் நகையை பறித்துக் கொண்டு தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றுவிட்டார்.

இதை சற்றும் எதிர்பாக்காத கவிதா அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
புகார்
மேலும், பொதுமக்கள் காவல் நிலையம் முன் கூடியதால் சற்று நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் வந்து மக்களை சமாதானப்படுத்தி அந்த நபரை நிச்சயம் கைது செய்துவிடுவோம் என உறுதி அளித்தனர். இதனால் கவிதாவை அப்பகுதி மக்கள் ஆறுதல் கூறி அழைத்துச் சென்றனர். அதுமட்டுமின்றி இதுபோன்று யாராவது சொன்னால் அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் அந்த நபர் குறித்து போலீசாருக்கு ரகசியமாக தகவல் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற போலி ஆசாமிகளை பிடிக்க முடியும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

