முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
ஆட்சியர் உத்தரவு
திருவள்ளூர், ஆவடி வீராப்புரம் ஸ்ரீவாரி பகுதியை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் மனைவி செளபாக்யா. இவர்களுக்கு ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகள் டானியா (9), வீராப்புரம் அரசினர் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் முகச் சிதைவு நோயால் கடந்த 6 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளார். நோயினை குணப்படுத்த தமிழக அரசு மருத்துவ உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில், சிறுமியை நேரில் சென்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சந்தித்தார். அவருடன் திருவள்ளூர் மாவட்ட மருத்துவத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சிறுமியின் உடல்நிலையை பரிசோதனை செய்து இதுவரை அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிறுமிக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் செய்து தரப்படும் என தெரிவித்தார். மேலும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்நிலையில் முகச்சிதைவு நோயால பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு, தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. மேலும் குழந்தையின் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கீடு செய்யவும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

