இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசவுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
டெல்லி பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட்டை சிறப்பாக நடத்தி முடித்ததற்காக மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் கலந்துகொண்டதற்காக பிரதமர் மோடியை நேரில் சென்று நன்றி தெரிவிப்பதற்காக நேற்றிரவு டெல்லி புறப்பட்டார் ஸ்டாலின்.
மோடியுடன் சந்திப்பு
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர். பின்னர் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசவுள்ளார் மு.க. ஸ்டாலின். தமிழ்நாட்டில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதா மீது விரைந்து முடிவெடுக்க வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.

