காவலில் வாலிபர் உயிரிழந்த சம்பவத்தில் கைதான துணை ஆய்வாளர் உள்பட 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விக்னேஷ் வழக்கு
சென்னை பட்டினப்பாக்கத்தை சேர்ந்த இளைஞர் விக்னேஷ் என்பவரை கடந்த ஏப்ரல் மாதம் தலைமை செயலக காலனி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அவர் உடல்நிலை குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து வந்தனர். போலீசாரின் தாக்குதலில் அவர் உயிரிழந்தது பிரேத பரிசோதனை ஆய்வின் அறிக்கையின் மூலம் அனைவர்க்கும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய சி.பி.சி.ஐ.டி போலீசார், குற்றம்சாட்டப்பட்ட தலைமை செயலக காலனி ஆய்வாளர் பவுன்ராஜ், ஏட்டு முனாப், சிறப்பு குமார், சிறப்பு துணை ஆய்வாளர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், ஆயுதப்படை போலீஸ்காரர்கள் ஜெகஜீவன், சந்திரகுமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 6 பேரும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, மனுதாரர்கள் 6 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

