மேட்டூர் அணையின் கீழ்ப்பகுதியில் உபரி நீர் தேங்கியிருக்கும் இடத்தில் நாட்டு வெடி குண்டுகள் வீசி மீன் பிடிப்பு. சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைக்கு பாதிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றது. தற்போது நீர் வரத்து குறைந்துள்ளதால் வெளியேற்றப்பட்டு உபரி நீர் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கமாபுரி பட்டினம், சின்னக்காவூர், சேலம் கேம்ப் பகுதிகளில் ஆங்காங்கே குளங்கள் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த நீரில் மீன்கள் அதிகமாக இருப்பதால் இதனை சாதகமாக்கி கொண்ட சமூக விரோதிகள் நாட்டு வெடி குண்டுகளை வீசி மீன் பிடித்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதனால் அணையில் மீன் வளங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைவதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேட்டூர் அணையின் அருகிலே வெடி வைத்து மீன்பிடிப்பதால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

