உலகம்

இரண்டாக பிளந்த விமானம்.. பதறவைக்கும் வீடியோ காட்சி!

பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கோஸ்டாரிகா. குட்டி நாடான கோஸ்டாரிகா, தங்கள் பொருளாதாரத்திற்கு பெரும்பாலும் சுற்றுலாத் துறையை சார்ந்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) கோஸ்டாரிகா விமான நிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த டிஎச்எல் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்திலிருந்து திடீரென புகை கிளம்பியது. அவசரமாக தரையிறக்கப்பட்ட அந்த விமானம் எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகி இரண்டாகப் பிளந்தது. இந்த திடீர் விபத்தின் காரணமாக கோஸ்டாரிக்காவில் உள்ள சான் ஜோஸில் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. இது தொடர்பான ஃபோட்டா மற்றும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

விபத்து நடக்கும்போது விமானத்தில் 2 பேர் மட்டுமே இருந்தனர். அவர்கள் இருவருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. இருவரும் நல்ல உடல்நிலையோடு உள்ளதாக கோஸ்டாரிகா தீயணைப்பு வீரர்களின் தலைவர் ஹெக்டர் சாவ்ஸ் தெரிவித்தார். இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விமான விபத்திற்கான காரணம் இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. ஹைட்ராலிக் பிரச்சனை காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. விபத்து குறித்த விசாரணையை உள்ளூர் அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக விமானி அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இருப்பினும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்து ஏற்பட்ட போது நடந்த அனைத்தும் அவருக்குத் தெளிவாக ஞாபகம் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினார்கள்.

 

Related posts