Editor's Picksஅரசியல்உலகம்

இம்ரான் கானின் ஆட்சி கவிழ்ந்தது.. அமெரிக்காதான் காரணமென வெளிவரும் ரகசியம்!

கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் இம்ரான் கான் ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப் போவதாக எதிர்க்கட்சிகளும் கூட்டணி கட்சிகளும் கூறிவந்த நிலையில், சனிக்கிழமை அன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் 342 பேரில் 174 உறுப்பினர்கள் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக வாக்களித்ததால் இம்ரான் கான் தனது பிரதமர் பதவியை இழந்தார்.

பாகிஸ்தானில், சுதந்திரத்திற்குப் பின்னர் எந்தவொரு பிரதமரும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவியில் இருந்தது கிடையாது. இந்த மோசமான சாதனையை இம்ரான் கான் முடிவுக்குக் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. 2019 தேர்தலில் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், இப்போது பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தானில் நிலைமை சீராக இல்லை. பல விஷயங்களில் அங்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தது. இதனால், இம்ரான் கான் அரசுக்கு எதிரான அழுத்தம் அதிகரித்தது. இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் இம்ரான் கான் அரசுக்கு எதிராக அங்குள்ள அரசியல் கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணி கட்சியினரும் இம்ரான் கான் அரசுக்கு எதிராகத் திரும்பியதால் இம்ரான் கான் ஆட்சி கவிழ்ந்தது.

தனது ஆட்சியைக் கவிழ்த்ததில் அந்நிய நாட்டுச் சதி இருப்பதாக, அதாவது அமெரிக்கா இருப்பதாக இம்ரான் கான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். மேலும், பாகிஸ்தான் நாட்டில் மீண்டும் ஒரு சுதந்திர போர் தொடங்கி உள்ளதாகவும், நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கப் பொதுமக்கள் வீதிகளுக்கு வந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, இம்ரான் கானுக்கு ஆதரவாக பல்லாயிரம் கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்ட காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நேற்றிரவு பாகிஸ்தான் முன்னாள் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் அகமது தலைமையில் பெருந்திரளாக பேரணி நடைபெற்றது.

பேரணியில் ஷேக் ரஷீத் அகமது பேசிக் கொண்டு இருக்கும் போது, திடீரென கூட்டத்தில் ஒரு பகுதியினர் “சவுகிதார் சோர் ஹை’ (காவலரே ஒரு திருடன்) என்று முழக்கமிடத் தொடங்கினர். நன்றாகச் சென்று கொண்டிருந்த இம்ரான் கானின் ஆட்சியை பாக். ராணுவம் திருடியதைச் சாடும் வகையில் மக்கள் இந்த கோஷத்தை எழுப்பினர்.

இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், ‘அமெரிக்கா ஆதரவுடன் இங்கு ஆட்சி மாற்றத்தை நடத்தச் சிலர் நினைக்கின்றனர். இது ஒருபோதும் நாட்டுக்கு நல்லதாக அமையாது. இதை எதிர்த்து வீதிகளில் வந்து போராடும் அனைத்து பாகிஸ்தான் மக்களுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்.

l

 

 

Related posts