தலித் சிறுவனை தாக்கிய கும்பல் – கால்களை நக்கச் சொல்லி வன்கொடுமை செய்த விபரீதம்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் தலித் சிறுவனை தாக்கியும், தங்களுடைய கால்களை நக்க சொல்லியும் வன்கொடுமை செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
வைரல் வீடியோ
கடந்த ஏப்ரல் 10ம் தேதி சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலானது. அதில் சுமார் 15 வயது மதிக்கதக்க சிறுவனை ஒரு கும்பல் சரமாரியாக தாக்குகிறார்கள். பைக் மீது உட்காந்திருக்கும் ஒரு நபர் கால்களை அந்த சிறுவனின் முகத்திற்கு நேராக நீட்டி நக்குமாறு மிரட்டுகிறார். அந்த சிறுவன் தயங்கவே, கும்பலில் இருந்த அனைவரும் அந்த சிறுவனை மிரட்ட தொடங்குகிறார்கள். உடனே பயந்து போன அந்த சிறுவன் தயக்கத்துடன் அந்த நபரின் கால்களை நாக்கால் நக்குகிறான். அவமானத்தில் கூனிக்குறி போன அந்த சிறுவனை பார்த்து அந்த கும்பலில் இருந்த அனைவரும் கேலி செய்து சிரிக்கிறார்கள். மேலும், இதை வீடியோ எடுத்து சமூக வலையத்தளத்தில் பதிவிடுகிறார்கள்.
அந்த வீடியோவை பார்த்த பல சமூக செயல்பாட்டாளர்களும் மக்களும், இது எங்கு நடந்தது? அந்த நபர்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்களின் கருத்துகளை சமூக வலையதளத்தில் பதிவிட்டனர். இதனால் சைபர் கிரைம் உதவியோடு போலீஸ் விசாரணையில் களமிறங்கியது.
சம்பவம்
உத்திரப் பிரதேச மாநிலம் ரேபரேலியில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. ரேபரேலியில் உள்ள தலித் சமூகத்தை சார்ந்த 10ம் வகுப்பு படிக்கும் சிறுவனை மிரட்டி ஒரு கும்பல் இந்த வன்கொடுமையை செய்துள்ளது.
சிறுவயதிலேயே தந்தையை இழந்த அந்த சிறுவன் தன் தாயாருடன் வசித்து வந்துள்ளார். தன்னை தாக்கிய கும்பலைச் சேர்ந்த ஒருவரின் வயலில் தான் அவரின் தாயார் வேலை செய்து வந்துள்ளார். ஆனால், அதற்குரிய சம்பளத்தை சரிவர தராமல் இருந்துள்ளனர். இதை பற்றி கேட்க சென்ற சிறுவனை தான் அந்த கும்பல் தாக்கியுள்ளது என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது
இது தொடர்பாக போலீசாரிடம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவன் புகார் அளித்துள்ளார். அதில் தனக்கு நடந்த கொடுமைகளை விவரமாக பதிவு செய்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார், முதற்கட்டமாக அந்த கும்பலை சேர்ந்த 7 பேரை கைது செய்து, சம்பவத்திற்கான காரணத்தை கண்டறிந்ததாகவும், மேலும் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல் ஆய்வாளர் அசோக் சிங் கூறினார்.