‘யாருக்கும் யாரும் நிகரில்லை’ – இளையராஜாவின் கருத்துக்குறித்து விஜயகாந்த் அறிக்கை!
இளையராஜா கருத்து
சமீபத்தில் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு இசைஞானி இளையராஜா புத்தகம் ஒன்றில் தன் கருத்தை பதிவிட்டு இருந்தார். இது தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் சர்ச்சையை கிளப்பியது. இளையராஜாவின் கருத்துக்கு சிலர் எதிர் கருத்துகளும், சிலர் ஆதரவான கருத்துகளையும் சமுகவலையதளத்தில் பதிவிட்டு வந்தனர். இதில் சிலர் இளையராஜாவை தகாத வார்த்தைகளால் திட்டி தங்கள் கருத்தை பதிவிட்டு இருந்தனர்.
அரசியல் கட்சிகளின் கருத்து
ஆளுங்கட்சியான திமுகவை சார்ந்த உதயநிதி ஸ்டாலினிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு ‘ இதை பற்றி நீங்கள் இளையராஜாவிடம் தான் கேட்க வேண்டும் என்றும், அவர் கருத்துக்குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்க வேண்டாம் என்று எங்கள் தலைவர் சொல்லி இருக்கிறார்’ என்றும் கூறிவிட்டார். பிரதான எதிர்கட்சியான அதிமுக வும் மௌனம் காத்து வருகிறது.
விஜயகாந்த் வேண்டுகோள்
இந்த நிலையில் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் இதுகுறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரே சூரியன் தான். ஒரே சந்திரன் தான்’ என்றும் ‘யாருக்கும் யாரும் நிகரல்ல’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இளையராஜாவின் கருத்து அவருடைய சொந்த கருத்தே அதை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்றும் அவரை காயப்படுத்தும் விதத்தில் அவரை இகழவேண்டாம் என்றும் கூறியுள்ளார். இளையராஜாவின் கருத்தை கருத்து சுதந்திரத்தோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இளையராஜா, அம்பேத்கர், மோடி என அனைவருமே சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள். இன்று அவர்கள், அவரவர் துறையில் முன் உதாரணமாக இருக்கிறார்கள். எனவே யாரும் யாரையும் ஒப்பிட தேவையில்லை. அவர்களுக்கு நிகர் அவர்களே என்று அந்த அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.