கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வாகன விபத்தில் உயிரிழந்தவரின் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், உடல் மாற்றி ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூர் கிராமம் காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தராஜ் (64). கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட பொதுச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இதனிடையே, கடந்த 4ஆம் தேதி காலை 11 மணியளவில், சுக்காலியூர் ரவுண்டானா வழியே கரூருக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது, செல்லாண்டிபாளையம் அருகே ஆனந்தராஜின் இருசக்கர வாகனத்தை முந்திச் சென்ற லாரி ஒன்று, எந்தவித சிக்னலும் காட்டாமல் திடீரென இடது பக்கமாக திரும்பியதாக தெரிகிறது. இதில், லாரியில் அடிபட்ட ஆனந்தராஜ், படுகாயத்துடன் கரூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மதுரையில் உள்ள ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
எனினும், சிகிச்சை பலனின்றி இரு தினங்களுக்கு முன்பு (மார்ச் 8) சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தார். தொடர்ந்து, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், அன்று மாலை அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்ததும், ஆனந்தராஜின் சொந்த கிராமமான புத்தாம்பூர் காளிபாளையம் சுடுகாட்டுக்கு அவரது உடல் அடுத்த நாள் இரவு 9 மணியளவில் எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது, அவரது முகத்தை நன்றாக பார்த்த உறவினர் ஒருவர், இது ஆனந்தராஜின் பிரேதம் இல்லை என கண்டுபிடித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக, தான்தோன்றிமலை காவல் நிலையத்திற்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில், சுடுகாட்டில் எரியூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆனந்தராஜ் உடலை மீட்ட போலீசார், மீண்டும் இரவோடு இரவாக மதுரைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், விருதுநகர் மாவட்டத்தில் சாலை விபத்தில் இறந்த தேவேந்திரனின் உடல்தான், ஆனந்தராஜ் குடும்பத்தாரிடம் மாற்றி ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு தேவேந்திரன் குடும்பத்தாரிடமிருந்த ஆனந்தராஜனின் பிரேதம் மீட்கப்பட்டு, மீண்டும் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆனந்தராஜனின் குடும்பத்தினர் மீண்டும் இறுதிச்சடங்கு செய்து, உடலை தகனம் செய்தனர். பிரேதத்தை மாற்றி ஒப்படைத்தது சம்பந்தமாக, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

