Editor's Picksஇந்தியா

மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியே வெல்கிறது பாஜக – ஓவைசி!

மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியே பாரதிய ஜனதா கட்சி, நாடு முழுவதும் தேர்தல் வெற்றிகளை சாத்தியப்படுத்துவதாக தெரிவித்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி.

சமீபத்தில் நடந்து முடிந்த உத்திர பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியானது. தேர்தல் முடிவுகளின் படி பஞ்சாப் தவிர்த்து பிற நான்கு மாநிலங்களிலும் அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது பாரதிய ஜனதா கட்சி.

பாரதிய ஜனதா கட்சியின் இந்த வெற்றியானது, மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களினாலேயே சாத்தியமானதென பாஜகவினர் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றில் கருத்து தெரிவித்துவரக்கூடிய சூழலில், நாடு முழுவதுமுள்ள மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தியே பாஜக தனது தேர்தல் வெற்றிகளை சாத்தியப்படுத்திக்கொள்கிறதென தெரிவித்துள்ளார் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் ஓவைசி.

மேலும், மின்னணு வாக்கு இயந்திரங்களால் பாஜக வென்றுவிட்டது என்ற பிற கட்சிகளின் விமர்சனங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அடிப்படையிலேயே மக்கள் மனங்களில் மத ரீதியான எண்ணங்களை புகுத்துவதில் பாஜக வெற்றியடைகிறது எனவும் பாஜகவை விமர்சித்துள்ளார் ஓவைசி.

முன்னதாக, உத்திரபிரதேசத்தில் தனித்து போட்டியிட்டு சமாஜ்வாதி கட்சிக்கான வாக்குகளை பிரித்த ஒவைசிக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மயவாதிக்கும் பத்ம விபூஷனும், பாரத ரத்னா விருதும் தரலாமென சிவசேனா கட்சியின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான சஞ்சய் ராவத் ஒவைசி குறித்து விமர்சனத்தை முன் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts