அதிமுகவின் தலைமை பொறுப்பை ஓ. பன்னீர்செல்வத்துக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுக்கூட்டம்
ஜூன் 23ம் தேதி அன்று அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனை நேற்று அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒற்றை தலைமை
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை கட்சி தலைமையிடம் முன்வைத்தனர். இதனால் மீண்டும் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது. அதிமுக தலைமை அலுவலகத்தின் அருகேயும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுருந்தது.
தீர்மானம்
சமீப காலமாக அதிமுக சரியான எதிர்க்கட்சியாக செயல்படவில்லை என ஒரு கருத்து பொதுமக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில், அந்த கருத்து கட்சிக்குள்ளும் எழுந்த காரணத்தினால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நடைபெறவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை கொண்டு வரவும் பெரும்பாலான அதிமுக மாவட்டச் செயலாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆதரவாளர்கள் சாலை மறியல்
நேற்று ஒற்றை தலைமை சர்ச்சை எழுந்தநிலையில் இன்று ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அவர்களது வீடுகளில் தனித்தனியாக அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் எம்.ஆர். விஜயபாஸ்கர், தளவாய் சுந்தரம், கோவை சத்யன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேபோல் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிசாமியை சந்தித்துவிட்டு ஓ.பன்னீர் செல்வத்தைச் சந்தித்தனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் வீடு அமைந்துள்ள சென்னை பசுமை வழிச்சாலையில் அவரது ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்தை அஇஅதிமுகவின் ஒற்றை தலைமையாக நியமிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பசுமை வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்படவுள்ளது.