மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு திரும்ப வேண்டும் என்று தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
அமைச்சர் மூர்த்தி
மதுரையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை சார்பில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு அமைச்சர் பி.மூர்த்தி திருவிழாவை தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அவர் கூறுகையில், ‘ தற்போது வீடுகளில் சமைக்கும் பழக்கம் சற்று குறைந்துள்ளது. மக்களிடையே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உண்ணும் பழக்கம் மேலோங்கி வருகிறது. பாரம்பரியமாக உணவு சமைக்கும் பழக்கம் மாறி உள்ளது. பாரம்பரிய உணவுகளை உட்கொண்டதால் 90 வயது வரை நமது முன்னோர்கள் உயிர் வாழ்ந்தார்கள். உணவு முறைகளின் மாற்றம் ஏற்பட்டதால் புதிய புதிய நோய்களை எதிர்க் கொள்ள சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளோம். உணவு பழக்கம் வழக்கம் மாற்றம் குறித்து அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இளைஞர்கள் உணவு முறைகளை மாற்ற வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். மக்கள் பாரம்பரிய உணவு பழக்க வழக்கத்திற்கு மாற வேண்டும். இயற்கை விவசாயத்தால் நஷ்டம் தான் ஏற்படும், ஆனாலும் இயற்கை விவசாயத்தை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்’ என உணவு முறை குறித்து அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார்.

