ராயப்பேட்டையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் ‘அதிமுக-வுக்கு அழிவு என்பதே கிடையாது’ என்று கூறியுள்ளார்.
மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் வரும் 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஒற்றைத் தலைமை
மேலும், இந்தக் கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். பொதுக்குழுத் தீர்மானங்கள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிக்கு ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் , ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் சந்திப்பு
இந்நிலையில், கூட்டத்திற்கு பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ‘கருத்துச் சுதந்திரம் அடிப்படையில் நான்கரை மணி நேரம் தலைமைக் கழக நிர்வாகிகளிடம் ஆரோக்கியமான விவாதம் நடந்தது. மேலும், கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்று கூறியிருக்கிறார்கள்.
விமர்சனம்
இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் சசிகலா குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சிக்கு சிறிதளவும் சம்பந்தம் இல்லாதவர் சசிகலா. அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி மலரும். யார் வேண்டுமென்றாலும் தங்களை எதிர்க்கட்சி என்று கூறிக்கொள்ளட்டும். ஆனால் தமிழ்நாட்டில் நாங்கள்தான் முதன்மையான கட்சி. எங்களுக்கு எதிரிக்கட்சிகள் கிடையாது, எல்லாம் உதிரிக் கட்சிகளே’ என்று ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.