சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சாய் பல்லவி, ‘ இடதுசாரி, வலதுசாரி என்று எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கவேண்டியது அவசியம்’ என்று கூறியுள்ளார்.
சாய் பல்லவி
பிரபல தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராகப் பங்கேற்றவர் சாய் பல்லவி. அதன்பிறகு 2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். மலர் டீச்சர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார் சாய் பல்லவி. தொடர்ந்து பல படங்களில் நடித்த இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இதனைத்தொடர்ந்து கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள ‘எஸ்.கே 21’ படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
ப்ரோமோஷன் வேலைகள்
இந்நிலையில், சாய் பல்லவி தெலுங்கில் ராணாவுடன் இணைந்து விரத பர்வம் என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் 17ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணியில் நடிகை சாய் பல்லவி மற்றும் படக்குழு ஈடுப்பட்டுள்ளனர். அதன்பெயரில் சமீபத்தில் சாய் பல்லவி பேட்டி ஒன்று அளித்தார். அதில் அவர் பேசிய சில விஷயங்கள் தற்போது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
பேட்டி
அவர் கூறியதாவது, ‘சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிதர்கள் கொலை செய்யப்படுவதாகக் காட்டியிருப்பார்கள். காஷ்மீரில், காஷ்மீர் பண்டிதர்கள் கொல்லப்படுவதும், பசுவை கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி கும்பலாக தாக்குகிறார்கள். அந்த நபர் கொல்லப்பட்டவுடன் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிடுகிறார்கள். காஷ்மீரில் அன்று நடந்ததற்கும் தற்போது நடந்து கொண்டிருப்பதற்கும் என்ன வித்தியாசம் ? என்று கேள்வி எழுப்பினார்.
வன்முறை தவறு
மேலும், என்னைப் பொறுத்தவரை எந்தச் சூழலிலும் வன்முறை என்பது தவறான அணுகுமுறை. இடதுசாரி, வலதுசாரி என எந்தப் பக்கம் இருந்தாலும் நல்ல மனிதராக இருக்கவேண்டியது அவசியம். நியாயத்தின் பக்கம் நிற்கவேண்டியது அவசியம். அப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன். ஒடுக்கப்பட்டவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதை விட்டுவிட்டு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும்’ என்று சாய் பல்லவி கூறியிருக்கிறார்.