அதிமுகவின் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட இருந்த முக்கியமான 23 தீர்மானங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அதிமுக செயற்குழு , பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் செயற்குழு , பொதுக்குழு கடந்த 23ம் தேதி வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேறப்பட திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

தீர்மானங்கள்
இதில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல், கழக அமைப்பு தேர்தல்களை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. தேர்தலில் தேர்ந்தேடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கும் தீர்மானம் முதலாவதாக இடம் பெற்றிருந்தது.
திமுக மீதான தீர்மானம்
இதனிடையே, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை ரத்து செய்தது, விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைக்க தவறியது, அதிமுகவினர் மீது பொய் வழக்குகளை போடுவது, திராவிட மாடல் என்ற போர்வையில் கபட நாடகம் ஆடுவது என திமுகவை கண்டித்து தனித்தனி தீர்மானங்கள் இடம் பெற்றிருந்தன. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் என்ற போர்வையில் குடும்ப முதலீடு செய்த திமுக அரசின் ஊழலை தோலுரித்துக் காட்டுவோம், மேலும் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்துவோம் என்ற முக்கிய தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன.

திருக்குறள் தேசிய நூல்
மேலும், மேகதாது பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சியை தடுத்து நிறுத்தவேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், என மத்திய, மாநில அரசை வலியுறுத்தும் தீர்மானங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
தலைவர்களுக்கு விருது
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம், பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாராட்டுகளும், வாழ்த்துகளும் தெரிவிக்கும் தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன.


