அரசியல்தமிழ்நாடு

அதிமுக பொதுக்குழு நிறைவு ! தீர்மானங்கள் ஒத்திவைப்பு ! பாதியில் வெளியேறிய ஓபிஎஸ் !

சென்னையில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம்  நிறைவு பெற்றது. இந்நிலையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று கொண்டு இருக்கும் பொது ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பாதியிலேயே மேடையை விட்டு இறங்கி சென்றதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்

சென்னையில் அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மஹாலில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில், அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்குவதைக் கண்டித்தும், ஆளும்கட்சியின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும் பொதுக்குழுவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. இது தவிர முல்லைப் பெரியாறு அணை, மேகதாது, காவிரி பிரச்சனை போன்ற பொது விவகாரங்களை உள்ளடக்கிய 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

admk meeting

தீர்மானங்கள் ஒத்திவைப்பு

தீர்மானங்களை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்மொழிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்தார். எனினும் தீர்மானங்களை நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் அறிவித்தனர். இந்நிலையில், ஒற்றை தலைமை யார் ? என்று முடிவு செய்த பின்பு தான் 23 தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என பொதுகுழுவில் முடிவு செய்யப்பட்டது.

pothukulu kootam

 பொதுக்குழுவை நிராகரித்த ஓபிஎஸ்

இதனிடையே, பொதுக்குழு தொடங்கியதில் இருந்தே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஒருகட்டத்தில், பொதுக்குழு மேடையில் இருந்து வைத்தியலிங்கத்துடன் கிழே இறங்க ஓபிஎஸ் எழுந்தார். அப்போது, மைக்கில் பேசிய வைத்தியலிங்கம், ‘சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த கூட்டத்தை நிராகரிக்கிறோம்’ என்று பேசியதோடு ஓபிஎஸுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார். இதையடுத்து ஓபிஎஸ் தரப்பினர் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.

பொதுக்குழுவில்  அதிமுக அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், அடுத்த மாதம் 11ம் தேதி செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts