திமுக ‘B’ டீமில் செங்கோட்டையன், OPS, TTV.தினகரன் செயல்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் கடும் நட வடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மதுரையில் நேற்று பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘சார்’ என்றாலே திமுகவுக்கு அச்சமும், அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
SIR-ல் என்ன தவறு இருக்கிறது. என்னுடைய எடப்பாடி தொகுதியில்கூட இறந்தவர்கள், வசிக்காதவர்கள் 8,000 பேர் இருப்பதாக கணக்கெடுத்துள்ளோம்.
இப்படி எல்லா தொகுதிகளிலும் 10,000, 20,000 வாக்காளர்கள் உள்ளனர்.
இதையெல்லாம் முறையாக SIR திட்டத்தின் மூலமாக முறைப்படுத்தினால் உண்மையான வாக்காளர்களால் நியாயமான தேர்தல் நடக்கும்.
கடந்த 4 ஆண்டு காலமாக TTV.தினகரன் எங்களுக்கு எதிராகத்தான் பேசி வருகிறார். அதில் புதிது ஒன்றும் இல்லை.
பயிர் செழித்து வர வேண்டுமென்றால் களைகளை எடுக்க வேண்டும். களைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.
2 நாட்களுக்கு முன் O.பன்னீர்செல்வம், திமுக ஆட்சிக்கு வரும் என்று கூறினார். இவரா கட்சியை ஒருங்கிணைக்கக் கூடியவர்? உண்மையான அதிமுக தொண்டர்களின் மனதில் இருந்து இந்த வார்த்தை வராது.
இவர்களெல்லாம் திமுகவின் ‘B-Team’ ஆக இருந்து செயல்படக்கூடியவர்கள். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவதில் எந்த தயக்கமும் இல்லை.
அதிமுகவை பொறுத்தவரை யார் துரோகம் செய்தாலும் சரி, தலைமையின் கருத்தை முழுமையாக கடைபிடிக்காவிட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
நான்தான் எதிரி, அதிமுக எதிரியில்லை என்றால் அவர்கள் எப்படி கட்சியை ஒருங்கிணைப்பார்கள். எத்தனை எட்டப்பர்கள், துரோகிகள் வந்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
எங்கள் பக்கம்தான் உண்மையான அதிமுகவினர் உள்ளனர். எம்ஜிஆர் காலத்தில் இருந்து அணி மாறாமல் இருந்தவர்கள் என்னுடன் உள்ளனர். மற்றவர்களை பற்றி பேசுவதே வீண்.
தென்மாவட்டங்களில் அதிமுக பலமாகவே உள்ளது. பலவீனமாக இருப்பதாக கற்பனையிலேயே ஊடகங்களும், பத்திரிக்கைகளும் தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
2011-2021 வரை திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது அதைப் பற்றி பேசினார்களா? கருணாநிதி இருந்தபோதே திமுகவால் எதிர்க்கட்சியாகக்கூட வர முடியவில்லை.
ஆனால் இப்போது அதிமுக பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்து இருக்கிறோம்.
அப்படி இருக்கும்போது வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவுக்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

