சமீபத்தில் திரைக்குவந்து விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் மாபெரும் வெற்றி பெற்ற படம் டான். தற்போது இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினி காந்த் பாராட்டியுள்ளார்.
தொலைக்காட்சி தொகுப்பாளர்
பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக தன் பயணத்தை தொடங்கியவர் நடிகர் சிவகார்த்திகேயன். தன் நகைச்சுவை கலந்த பேச்சால் மக்களிடையே பிரபலமானார். மேலும், இவர் பல திரைப்பட நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார். அப்படி ஒரு திரைப்பட விழா ஒன்றில் இவரது நகைச்சுவை திறனை பார்த்து தான் இயக்குனர் பாண்டியராஜ் மெரினா பட வாய்ப்பையே வழங்கினார். இதை பின்னர் ஒரு பேட்டியில் அவரே குறிப்பிட்டு இருந்தார்.
சினிமா அறிமுகம்
இவர் முதலில் கதாநாயகனாக அறிமுகமான படம் மெரினா தான்.இருப்பினும் 2013ம் ஆண்டு வெளியான எதிர்நீச்சல் படம் மூலம் தான் கதாநாயகனாக வெற்றி பெற்றார். அதனைத்தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களின் மூலம் தெடர்ந்து வெற்றி பெற்றார் சிவகார்த்திகேயன். அதற்குப்பிறகு வெளியான வேலைக்காரன் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் பலரும் நல்ல சமூக கருத்துடைய படம் என்று பாராட்டினர்.
நடிகர் ரஜினி காந்த்
சமீப காலமாக நல்ல படங்களை பார்த்துவிட்டு தொடர்ந்து இளம் கலைஞர்களை வெகுவாக பாராட்டி வருகிறார் நடிகர் ரஜினி காந்த். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் இவர் தொடர்ந்து இளைஞர்களை ஆதரித்து வருகிறார். விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மகான்’. இத்திரைப்படத்தை பார்த்து விட்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை அழைத்து பாராட்டினார்.
டானுக்கு பாராட்டு
மேலும், நடித்த ரெமோ போன்ற சில படங்களை பார்த்தும் பாராட்டியிருக்கிறார். இந்நிலையில் கடந்த வாரம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் டான். தற்போது இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனை அழைத்து பாராட்டியுள்ளார் நடிகர் ரஜினி காந்த்.
அதிலும் கடைசி 30 நிமிடம் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று ரஜினி கூறியிருக்கிறார். டான் படத்தை சிறப்பாக எடுத்திருக்கீங்க என்று இயக்குனர் சிபி சக்கரவர்த்தியை புகழ்ந்துள்ளார். இதை பேட்டி ஒன்றில் சொல்லி தன் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன்.