சூரியன் வாயுப் பொருள்களால் ஆன ஒரு நெருப்புக் கோளமாகும். சூரியனின் விட்டம் 14,00,000 கிலோ மீட்டர்களாகும். அதாவது புவியின் விட்டத்தைப் போல் 109 மடங்குகளாகும். சூரியனின் ஈர்ப்பு சக்தி, புவியின் ஈர்ப்பு சக்தியைப் போல் 28 மடங்கு அதிகமாகும். சூரியன் அது இருக்கும் அண்டத்தின் மையத்திலிருந்து சுமார் 32,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. (ஒரு ஒளி ஆண்டு = 5,88,00,00,000 மைல்கள்).
இந்த அண்டத்தின் மையத்தைப் பற்றிக் கொண்டு வினாடிக்கு 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒரு முறை சுற்றி வரச் சூரியனுக்கு சுமார் 225 மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது.
இத்துடன் சூரியன் தனது அச்சைப் பற்றிக் கொண்டு ஒருமுறை சூழலத் துருவத்தில் (at the Poles) 24 முதல் 25 நாட்களும்; மைத்தில் 34 முதல் 37 நாட்களும் ஆகின்றது.
சூரியன், புவியிலிருந்து ஏறக்குறைய 150 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அளவில் சூரியன் புவியைப் போல் 13,00,000 மடங்கு பெரியது.
சூரியன் வாயுவினா லான நெருப்புக் கோளமாக இருந்தாலும் இது நான்கு அடுக்குகளாக உள்ளது. சூரியனின் ஒளிமயமான மைய வட்டுப் பகுதி ஒளிக் கோசம் (Photosphere) எனப்படும்.
இதில் வெப்பநிலை 14 மில்லியன் டிகிரி சென்டிகிரேட் அளவு இருக்கும். இது தொடர்நிற மாலையைக் (continuous spectrum) கொண்டது. இந்த ஒளிக் கோசத்தைச் சுற்றி அமைந்துள்ள பகுதி சூரியனின் (atmosphere) வளி மண்டலமாகும்.
இதன் மூடியுள்ள பகுதி வெவ்வளி வட்டம் (Chromosphere) எனப்படும். இதன் வெப்ப நிலை ஏறக்குறைய 6000 டிகிரி சென்டிகிரேட் அளவு காணப்படுகிறது.
இப்பகுதியில் பல்வேறு தனிமங்கள் வாயு நிலையில் காணப்படுகின்றன. இவ்வெவ்வளிவட்டத்தைச் சூழ்ந்துள்ள பகுதி ஒளிவளையம் (corona) ஆகும்.
இந்த ஒளி வளையத்தில் உள்ள வாயுக்களின் வெப்பநிலை வியக்கத்தக்க அளவில் சுமார் 2 மில்லியன் கெல்வின் அளவுக்குக் காணப்படும். இதற்குக் காரணம் ஒளிக்கோசம் மற்றும் வெவ்வளிவட்டம்.
சூரியக் கரும்புள்ளி (Sun Spot) :
சூரியனின் மேற்பரப்பில் சில இடங்களில் சில வேளைகளில் பல கரும்புள்ளிகளைக் காணலாம். இக்கரும்புள்ளிகள் காந்த விசையின் பாதிப்பினால் ஏற்பட்டவையாகும்.
இப்புள்ளிகள் சூரியனின் மேற்பரப்பிலுள்ள ஏனைய பகுதிகளாகக் காட்டிலும் வெப்பம் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. சூரியப் புள்ளிப் பகுதியைச் சுற்றியுள்ள வாயுக்கள் வெளியிடும்.
5700 டிகிரி கெல்வின் வெப்பத்தைக் காட்டிலும், சூரியப் புள்ளிப் பகுதியிலுள்ள வாயுக்கள் வெளியிடும் வெப்பம் குறைவாக காணப்படும்.
4000 முதல் 4500 டிகிரி கெல்வின் அளவில் இருப்பதுதான் அது கருமையாகக் காணப்படுவதற்குக் காரணமாகும். கரும்புள்ளிக்கு அருகிலுள்ள சூரிய வாயு காந்தப் புலத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
சூரியனிலுள்ள அயனிகள் காந்தப் புலத்தில் தன்னிச்சையாகச் செல்லாமல் காந்தப் புல திசையிலேயே ஒருங்கிணைந்து காணப்படும்.
இக்காரணத்தால் சூரியக் கரும்புள்ளியிலுள்ள அயனியாக்கமடைந்த வாயுவும், ஏனைய சூரிய வளி மண்டலத்திலுள்ள வாயுவும் வேறுபட்ட வடிவங்களில் காணப்படுகின்றன.
அயனியாக்கமடைந்த வாயு பல ஆயிரம் கி.மீக்கு அனற் பிழம்பு போன்று சுவாலைகளாகக் (Prominences) கிளம்பும். கரும்புள்ளிகள் தோன்றும் கால அளவு சில மணி நேரங்களிலிருந்து பல வாரங்கள் வரையானதாகவும் காணப்படுகிறது.
நீண்ட கால அளவைப் பெற்றிருப்பின் புவியின் அயனி மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் வானொலித் தகவல் தொடர்பில் பாதிப்பு ஏற்படுகிறது.
புவியை நோக்கி வரும் மின்னூட்டப்பட்ட துகள்களை மின்காந்தப் புலம் விலக்கித் தள்ளும். இதனால் அத்துகள்கள் புவியின் இருதுருவங்களை நோக்கி ஈர்க்கப்படும்.
இவ்வாறு துருவங்களை நோக்கி மின் துகள்கள் ஈர்க்கப்படுவதால் வடக்கு மற்றும் தெற்கு துருவம் நோக்கி பேரொளி (அ) அறோறா பொறியாலிஸ் (Aurora Borealis) எனப்படும் விந்தைக் காட்சிகள் அதிகமாகக் காணப்படும்.
சூரியனில் ஏற்டும் இந்த மாற்றம் 22 ஆண்டுகாலச் சுழற்சியை உடையது. இதுவும் இந்த 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியைக் கொண்டதாகக் காணப்படுகிறது.
இந்த 11 ஆண்டுத் துணைச் சுழற்சியில் மிகவும் குறைவாகக் காணப்படும் காலத்திலிருந்து ஏறக்குறைய 4½ ஆண்டுகளுக்குப் பின் இக் கரும்புள்ளிகள் மிகவும் அதிகமாகவும், பின்னர் 6½ வருடங்களில் மீண்டும் குறைவாகவும் காணப்படும்.
மேலும் ஒவ்வொரு 11 ஆண்டுகாலத் துணைச் சுழற்சியின் போதும் சூரியனின் காந்தப் புலத்தின் திசை முழுவதுமாக எதிராக மாறுபடுகிறது.
சூரியனிலிருந்து வெளிப்படும் தீ நாக்குகளிலிருந்து துகள்கள் விண்வெளியில் எறியப்படுகின்றன. இது சூரியப் புயல் எனப்படும் இப்புயல் புவியையும் கடந்து வெளிக் கோள் மீன்கள் வரையும் பரவுகின்றது.
புவிக்கு அருகில் இப்புயல் வினாடிக்கு 600 கிலோ மீட்டர் வேகத்தில் கடக்கிறது. இந்த வாயுத் துகள்கள் மிகவும் நுண்மையாக இருப்பதால் புவி எந்த வித வெப்பப் பாதிப்பையும் பெறுவதில்லை.
விண்வெளிக் கலங்களைக் கொண்டு திரட்டப்பட்ட தகவல்களிலிருந்து இப்புயல் சனிக் கோள் மீனின் சுற்றுப் பாதை வரை காணப்படுவதாக தெரிகிறது.